|
ஷாருக்கானும் வேண்டாம்! சானியா மிர்சாவும் வேண்டாம்!! பா.ஜ.க விற்கு, இந்திய மக்கள் எந்த மதத்தில் இருந்தால் என்ன?
இந்தி சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாருக்கான். ஒரு படத்தில் நடிப்பதற்கு பல கோடிகள் வாங்குபவர். சானியா மிர்சா ஹைதராபாத்தை சேர்ந்தவர். பெண்கள் டென்னிஸ் விளையாட்டில் உலகத் தரவரிசையில் 29-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
தகவல் தொழில் நுட்பத் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ குழுமத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி, உலகத்திலுள்ள பணக்காரர் வரிசையில் 28-வது இடத்தில் இருக்கிறார்.
சங்பரிவாரக் கும்பல் பொது மேடைகளில் பேசும்போது இந்த மூவரையும் தான் உதாரணமாக சுட்டிக் காட்டுவர். அரசாங்கம் இவர்களுக்கு எந்தவித சலுகையும் காட்டவில்லை, அவர்களும் பெறவுமில்லை. எனினும் அவர்கள் அவரவர் துறையில் முன்னுக்கு வரவில்லையா? என்று கூறுவார்கள்.
சங்பரிவாரக் கும்பல் இந்த மூவரையும் உதாரணம் காட்டுவது இவர்களைப் பாராட்டுவதற்காக அல்ல. முஸ்லிம்களுக்கு எந்தவித சலுகைகயும் இந்த அரசாங்கம் கொடுக்கக்கூடாது என்பதற்காக.
பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு சலுகைகள் ஏன் வேண்டும் என்பதை ஆராய்வதற்கு முன், இந்த மூவரும் அவரவர் துறையில் சிகரத்தை தொட்ட தால் முஸ்லிம் சமுதாயத்திற்கு என்ன பயன் கிடைத்தது என்பதை ஆராய வேண்டும்.
ஷாருக்கான் நம்பர்-1 நடிகரானது ஒரு தனி நபருக்கு கிடைத்த ஆதாயமே. முஸ்லிம் சமுதாயம் அந்தத் தொழிலையே ஓர் ஆபாச தொழிலாக கருதி, பலர் அதில் ஈடுபட தயங்குவர்.
இதே போல் சானியா மிர்சா ஆடுவதைப் பார்த்து ரசிப்பவர்களை விட முஸ்லிம் களில் கூச்சப்படுபவர்கள் அதிகம்.
அசிம் பிரேம்ஜி ஒரு முஸ்லிம் என்று சங்பரிவார் கும்பல் அடையாளப்படுத்திய பிறகே இவர் முஸ்லிம் என்று பலருக்கும் தெரிய வந்தது. இவருடைய நிறுவனங்களில் பெரிய பதவி எதையும் முஸ்லிம்களுக்கு கொடுக்கமாட்டார். பணியாட்கள் எடுக்கும் போது முஸ்லிம்களுக்கு என்று எந்த சலுகையும் காட்டமாட்டார்.
டால்மியா சிமெண்ட் தொழிற் சாலையிரிருந்து வெளியாகும் ஒவ்வொரு மூட்டையிரிருந்தும் ஒரு தொகை சங்பரிவார் நிறுவனங்களுக்கு கொடுக்கப் பட்டு வருவது பலகாலமாக பேசப்பட்டு வரும் செய்தி.
பிர்லா, அம்பானி, பயந, கோத்ரேஜ் குழுமங்கள் தங்கள் சமூகத்திற்கு தங்கள் நிறுவனங்களின் பணியிடங்களில் முன்னுரிமை கொடுப்பதுடன், அந்த நிறுவனங்களில் கிடைக்கும் வருமானங்களிரிருந்து ஒரு தொகையை அவரவர் சமூகத்தின் நலனுக்கு ஒதுக்குகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசும்போது தன்னுடைய அறக்கட்டளையில் முஸ்லிம்களுக்கென்று எந்த சலுகையும் கொடுப்பதில்லை என்று திறந்த மனதோடு கூறினார் அசிம் பிரேம்ஜி.
தான் இறந்தவுடன், மசூதிக்குப் பின்னால் உள்ள கபரஸ்தானில் (அடக்கம் செய்யும் இடத்தில்) தனக்கு இடம் வேண்டும் என்று நினைப்பாரே ஒழிய, வாழும் காலத்தில் வறுமையால் வாடும் முஸ்லிம்களுக்கு தானம் தர்மம் செய்து முஸ்லிம்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்.
சங்பரிவார் கும்பல் அசிம் பிரேம்ஜியை ஏன் உதாரணம் காட்டுகின்றன என்பது இப்போது விளங்கும்.
சின்னக் குழந்தைக்கும் தெரியும் இந்தியாவில் 58 அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் பதிவு செய்துள்ளன.
முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி தருவது என்னவென்றால் 56 அரசியல் கட்சிகள் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படவில்லை.
சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால், சின்னக் குழந்தைக்கும் கூட தெரியும் என்பது தமிழ் சினிமாவில் வரும் பாட்டு. இந்தியாவில் மதவாத கட்சி எது என்றால், பா.ஜ.க என்று சின்னக்குழந்தைக்கும் தெரியும். இதே போல் மதவெறிப் பிடித்தவர்கள் யார் என்று கேட்டால் அத்வானி, மோடி என்று கூறும்.
முஸ்லிம்களுக்கு ஒரு சிறு சலுகை அளித்தால் போதும் உடனே கொதித்து எழுகின்றனர். இது பிரிவினையை தூண்டும் என்கின்றனர்.
இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில், காட்டில் வாழும் சிறுத்தைகள் பாதுகாப்பிற்கு ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்வானி ஒன்றும் சொல்லவில்லை.
ஆசாத் கல்வி அறக் கட்டளைக்கு 50 கோடி ஒதுக்கப்பட்டுள் ளது என்றவுடன் இது ரியாகத் அரிகான் பட்ஜெட் பிரிவினையைத் தூண்டும் என்கிறார். அத்வானி. மிருகத்திடம் காட்டும் பரிவுக்கூட முஸ்லிம்களிடம் காட்டுவதில்லை.
இந்தியாவுக்கு பிரதமராக நினைக்கிறார். இந்திய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு முஸ்லிம்கள் வாழ் கிறார்கள். இவருடைய இந்த அறிக்கையால் முஸ்லிம்கள் இவரை முழுமையாக நிராகரிக்க வாய்ப்புள்ளது.
இவருடைய சுயசரிதை "My Country My Life' என்ற தலைப்பில் மார்ச் 19லிந் தேதி டெல்லியில் வெளியிட்டார். இதில் இவர் தன்னை உண்மையான மதச்சார் பற்றவர் என்று பறைசாற்றிக் கொள்கிறார். அதேசமயம் 14 வயதிலிருந்து இதுநாள் வரை ஆர்.எஸ்.எஸ். கொள்கையில் ஈடுபடுவதாக சொல்கிறார்.
இதே அத்வானி 1977லில் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் சேரும் போது, இனி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேரமாட்டேன் என்று ஜெயப்பிரகாஷ் நாராயணனிடம் உறுதியளித்தார்.
போலியான செயல் அத்வானி தான் ஒரு உண்மையான மதச்சார்பற்றவர் என்பதற்காக சில போலியான செயல்களை செய்வார். தான் எழுதிய சுயசரிதை புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை தலைமை தாங்க வைத்து வெளியிட்டார், வாஜ்பாய் உடல் நலமில்லை.
ஆனால் அப்துல் கலாமை தேர்ந்தெடுத்தது ஏன்? வாஜ்பாய்க்கு உடல் நலம் இல்லை என்றால், உடல்நலம் பெற்ற தடியன் நரேந்திர மோடியை தலைமை தாங்க வைத்து வெளியிட வேண்டியது தானே?
அப்துல் கலாமை தலைமை தாங்க வைத்து, நரேந்திர மோடியை புகழ்ந்தது வேதனைத் தந்திருக்கும் அப்துல் கலாமிற்கு. பா.ஜ.க.வின் ஆதரவால் ஜனாதிபதியான அப்துல்கலாம் நன்றிக் கடன் செலுத்தும் போது, இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கினார் அத்வானி.
இதுபோல 1991லில் ரதயாத்திரை சென்ற போது ஒரு முஸ்லிமை ஓட்டுநராக வைத்துக் கொண்டார். தான் உண்மையான மதச்சார்பற்றவர் என்பதை நிரூபிப்பதற்காக அத்வானி இதுபோன்ற போலியான காரியங்களை செய்வார் என்று இந்திய மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தெரியாதா என்ன?
பாபர் மசூதியை இடிப்பதற்காக மதவெறியைத் தூண்டி வீதி வீதியாக, தெருத்தெருவாக வலம் வந்தவர்தான் அத்வானி. இன்று தன் சுயசரிதை புத்தகத்தில், தனக்கும் இடித்ததற்கும் தொடர்பு இல்லை என்ற தோரணையில் எழுதியிருக்கிறார். கடப்பாரையால் இடித்தது கரசேவகர்கள், தான் கடப்பாரையை தொடவே இல்லை. தூரத்தில் காரில் உட்கார்ந்திருந்தேன் என்கிறார் அத்வானி.
காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் கத்தியால் சங்கரராமனை பல இடங்களில் குத்தி ரத்தக்களரியாக்கி கோவில் வளாகத்திலே கொலை செய்தனர். கொலையாளிகளை தூரத்தில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் காஞ்சி சங்கராச்சாரி முதல் குற்றவாளியாக கூண்டிலே நிறுத்தப்பட்டிருக்கிறார். காஞ்சி சங்கராச்சாரியார் நிலையில் தான் அத்வானியும்.
புண் எப்படி ஆறும்?
சமீபகாலமாக பொதுக்கூட்டங்களில் பேசும் குஜ்ராத் முதல் மந்திரி நரேந்திர மோடி, குஜ்ராத் கலவரத்தால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட புண் ஆறிவிட்டது.
குஜ்ராத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியின் பயனை முஸ்லிம்கள் அனுபவித்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.
சென்ற வார 'மக்கள் உரிமை' இதழில் சுருக்கமாக வெளியிடப்பட்ட குஜராத் விளைவுகளை வாசகர்கள் மறுபடியும் படிக்க வேண்டும். இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட முஸ்லிம்களைக் கொன்று உடலை மண்ணில் புதைத்தனர். சிலரைக் கலவரக்காரர்கள் கொளுத்தி எரித்தனர்.
புண் எங்கிருக்கும் ஆறுவதற்கு?
கணவனை கொன்று கைம்பெண்ணின் நெஞ்சில் ஏற்பட்ட புண் எப்படி ஆறும்? பாரியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு மானமங்கம் ஆன பெண்ணின், புண் எப்படி ஆறும்?
கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்து வீதிக்கு வந்த முஸ்லிம்களின் மனதில் ஏற்பட்ட புண் எப்படி ஆறும்?
இன்னும் ஆயிரக்கணக்கில் அகதிகளாக இருக்கும் முஸ்லிம்களின் உடம்பில் ஏற்பட்ட புண் எப்படி ஆறும்? நரேந்திர மோடியும் குற்றவாளிகளும் இம்மையில் தப்பி விடலாம், மறுமையில் தப்பவே முடியாது. தெய்வம் நின்று கொல்லும். நடவடிக்கை எடுக்கவில்லை
சிறுபான்மை மக்களிடையே அக்கறைக் காட்டும் காங்கிரஸ் கட்சி உருப்படியான திட்டங்கள் எதுவும் கொண்டு வரவில்லை.
ஏழரை லட்சம் கோடி மதிப்புள்ள இந்த வருட மத்திய பட்ஜெட்டில், வெறும் 500 கோடி ரூபாய் கூடுதலாக முஸ்லிம்களுக்கு ஒதுக்கி, பதினெட்டு கோடிகள் உள்ள இந்திய முஸ்லிம் மக்களின் மனதில் இடம்பிடித்து விடலாம் என்று நினைக்கிறது.
சச்சார் கமிட்டி, மிர்சா கமிஷன் பரிந்துரையின் படி முஸ்லிம்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை, ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட பால்தாக்கரே மற்றும் அவரது சகாக்கள் மீது பம்பாய் கலவரத்திற்காக மஹாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தும் நடவடிக்கை இல்லை.
பா.ஜ.க.வின் எதிர்தாக்குதலுக்கு பயப்படுகின்றது காங்கிரஸ் கட்சி. இந்தியாவின் விவசாயத்துறை நலிவடைந்துள்ளது என்பது நன்கு தெரியும்.
கடந்த பத்து ஆண்டுகளில் 1,66,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் 60,000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்துள்ளது. இப்படி ஒரே சமயத்தில் இவ்வளவு பெரிய தொகையை தள்ளுபடி செய்வதைவிட நலிந்த துறையில் வாழும் இந்திய மக்களுக்கு பொருளாதார திட்டம் முன்கூட்டியே எடுத்திருக்க வேண்டும் என்பது நிபுணர்களின் கருத்து.
23.3.2008 தேதியிட்ட தினத்தந்தி சென்னைப் பதிப்பில் மூன்றாம் பக்கத்தில் வெளிவந்த செய்திக் குறிப்பு : தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா. ஐம்பது மேல் நகரம் கிராமத்தைச் சேர்ந்த போசங்கு (வயது 50) என்ற விவசாயி குத்தகைக்கு ஒரு ஏக்கரும், ஒத்திக்கு ஒரு ஏக்கரும் எடுத்து அந்த நிலத்தில் நெல் சாகுபடி செய்திருந்தார் தொடர்ந்து பெய்த மழை காரணமாக நெற்பயிர் மூழ்கியதால் மனம் உடைந்த அவர் பூச்சி மருந்தை குடித்தார். மரணம் அடைந்தார்.
விவசாயி எழுதியதாக கூறப்படும் ஒரு கடிதம் அவரது வீட்டிலிருந்து கண்டெடுக்கப் பட்டுள்ளது. அதில் வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்திருந்ததாகவும் ஒரு படி நெல் கூட அறுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மன வருத்தம் ஏற்பட்டு பூச்சிக் கொல்லி மருந்து குடித்ததாகவும் தனக்கு சொந்தமாக நிலம் இல்லை எனவும் தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்றும், குறிப்பிட்டு ஆங்கிலத்தில் கையெழுத்திட்டு உள்ளார்.
அப்துல் காதருக்கு கிடைக்காது
போசங்கு இருந்த இடத்தில் ஒரு அப்துல் காதர் இருந்தார் என்று கற்பனை செய்து பார்ப்போம். அப்துல் காதர் நிச்சயமாக பூச்சி மருந்து குடிக்க மாட்டார். ஏனென்றால் உலகளவில் நடத்திய ஆய்வில் தற்கொலை செய்து கொண்டவர்களில் முஸ்லிம்கள் மிக மிக குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வறிக்கை சில காலங்களுக்கு முன் வெளியானது.
இது எதனால் என்றால், முஸ்லிம்கள் இறை நம்பிக்கை உடையவர்கள். இஸ்லாத்தில் தற்கொலை தடுக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்டவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் மோட்சம் கிடையாது என்பது இஸ்லாம் விதித்துள்ள கட்டளை. ஆனால் அப்துல் காதரும் செத்து மடிவான், கடன் தொல்லையால் வறுமை வாட்டியதால் இந்திய நிலவரப்படி போசங்கிற்கு நிவாரணம் கிடைக்கும். அப்துல் காதருக்கு கிடைக்காது.
இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு அளவு கோல் தின வருமானம் ரூ.12. இந்த 12 ரூபாய் வைத்துக் கொண்டு இந்த காலத்தில் ஒருவன் என்ன செய்வான்?
இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை ஐந்து கோடி. இந்த ஐந்து கோடி முஸ்லிம்களில் ஒரு சதவீதமாவது ஐந்து லட்ச முஸ்லிம்கள் அப்துல் காதரைப் போல் வருடாவருடம் இறக்கின்றனர். பத்து வருடமாக தற்கொலை செய்து கொண்ட 1.66 லட்சம் விவசாயிகள் இழந்ததற்கான நிவாரணம் ரூ.60 ஆயிரம் கோடி. வறுமைக் கோட்டிற்கு கீழ் இறக்கும் முஸ்லிம்களுக்காக இந்த பட்ஜெட்டில் எந்த நிதி ஒதுக்கீடும் கிடையாது.
தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு
வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள், சமுதாயத்தில் கீழ்தட்டில் உள்ளவர்கள். இதற்கு சற்று மேல்தட்டில் உள்ள முஸ்லிம்களின் நிலைமையை பார்ப்போம். அர்ஜுன் சென்குப்தா மத்திய கமிஷன், முஸ்லிம்களில் 85% பேர் அமைப்பு சேரா நிறுவனங்களில் வேலை செய்கின்றனர்.
இவர்களுக்கு தின வருமானம் ரூ.20 பெற்று மிகவும் ஏழ்மையான நிலைமையில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர்களுக் கென்று எந்த பட்ஜெட்டிலும் எந்த ஒரு நிதி ஒதுக்கீடும் இல்லை. தனியார் நிறுவனங்களில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க சட்டம் கொண்டு வந்தால்தான், இவர்களுக்கு மறு வாழ்வு கிடைக்கும்.
சினிமா தொழில், விளையாட்டு, வியாபாரம் இவைகளில் முஸ்லிம்களுக்கு சலுகைகள் காட்ட வேண்டும் என்று எந்த ஒரு முஸ்லிம் இயக்கமும் என்றும் கேட்டதில்லை.
எனவே ஷாருக்கான், சானியா மிர்சா, அஜீம் பிரேம்ஜி போன்றவர்களை உதாரணம் காட்டி, முஸ்லிம்களுக்கு சலுகைகள் இட ஒதுக்கீடுகள் கொடுக்கக் கூடாது என்பதற்கான காரணங்களாக ஆக முடியாது.
ஏற்றத்தாழ்வுள்ள இந்திய மக்களில் - பணிகளில், கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு இருந்தால்தான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்கள் பொருளாதார வளர்ச்சியடையும் என்ற கொள்கைகள் கொண்டு துவக்கப்பட்ட கட்சிகள் தான் நீதிக்கட்சி, தி.க., தி.மு.க, சமாஜ்வாடிக்கட்சி, பகுஜன்சமாஜ் கட்சி, ராஷ்டிரிய ஜனதாதளம் போன்றவைகள். அரசுப் பணிகளில், கல்வித் துறையில் இட ஒதுக்கீடு நிறைவேற்றிய மாநிலங்களான தென் மாநிலங்களில் உள்ள தமிழ்நாடு கர்நாடகம் மனித மேம்பாட்டு வளர்ச்சியில் ஆட்சித் திறனில், இட ஒதுக்கீடு கொடுக்காத வடமாநிலங்களை விட முன்னேறி உள்ளது என்று ஆய்வு கூறுகிறது.
மதச்சார்பற்றவர்களா?
உண்மையான மதச்சார்பற்றவர்கள் தாங்கள்தான் என்று பா.ஜ.க.வினர் அடிக்கடி கூறி வருகின்றனர். இவர்கள் எவ்வளவு பொய்யர்கள் என்று காண வேண்டும். அட்டவணைச் சாதியினர், மலைச் சாதியினர் என்று அழைக்கப்படும் தலித் மக்கள் இந்துக்களாக இருந்தால் இவர்களுக்கு சலுகைகள், இட ஒதுக்கீடுகள் கிடைக்கும். இவர்கள் வேறு மதத்திற்கு மாறினாலும் இந்த சலுகைகள் இட ஒதுக்கீடுகள் கிடைக்காது.
இதை மாற்ற எல்லா அரசியல் கட்சிகளும் ஒப்புதல் அளிக்கும் போது, பா.ஜ.கவினர் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மதமாற்ற தடைச் சட்டம் கடுமையான தண்டனைகளுடன் கொண்டு வரப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற கட்சி என்று சொல்லிக் கொள்ளும் பா.ஜ.க விற்கு, இந்திய மக்கள் எந்த மதத்தில் இருந்தால் என்ன?
வறுமைக் கோட்டிற்கு கீழ்வாழும் முஸ்லிம்களின் உண்மையான வாழ்க்கை நிலையை அறிய வேண்டுமானால், உலகிலேயே இரண்டாவது அழகிய கடற்கரையான மெரினா கடற்கரைக்கு மேற்கே அரைகிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஐஸ்ஹவுஸ் பகுதியைக் காட்டலாம்.
ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் இங்கு குடிசை வாழ் மக்களாக வாழ்ந்து வருகிறார்கள். இங்குள்ள முஸ்லிம்கள் நேற்று இன்று பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக குடியேறியவர்கள் அல்ல, ஐம்பது நூறு ஆண்டுகள் அப்படியே குடிசை வாழ் மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
நிதி ஒதுக்கீடு வேண்டும்
மாடமாளிகையில், அக்கிரஹாரத்தில் வாழும் பா.ஜ.க.வினரை இங்கு குடி பெயரச் செய்ய வேண்டும்.
அமெரிக்கா ஐரோப்பா நாடுகளில் வாழும் ஆடு மாடுகளுக்கு கிடைக்கும் அடிப்படை வசதிகள்கூட இங்குள்ள குடிசை வாழ் முஸ்லிம்களுக்கு கிடைப்பதில்லை.
இங்கு அதிகமானவர்கள் கூரித் தொழிலாளர்களாக அமைப்பு சாரா நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள். ஒட்டிய வயிறும் எலும்பும் தோலுமாக உள்ள இவர்களுக்கு ஷாருக்கான் போன்று எப்படி குழந்தை பிறக்கும்?
இங்குள்ள முஸ்லிம் பெண்களில் அதிகமானோர் வீட்டு வேலை செய்து வாழ்க்கை நடத்துபவர்கள். இவர்களுடைய அசையும் அசையா சொத்துக்களை விற்றால் சானியா மிர்சா பயன்படுத்தும் ஒரு டென்னிஸ் மட்டையைக்கூட வாங்க முடியாது.
இங்கு எப்படி சானியா மிர்சா தோன்றுவாள்? ரம்ஜான் மாதத்தில் இங்குள்ள த.மு.மு.க. தொண்டர்கள் ஜகாத் வசூலித்து அரிசி, உடைகள் அளிப்பது, தவித்த வாய்க்கு தண்ணீர் ஊற்றுவது போல் ஆகின்றது. எனினும் இவர்களுடைய பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்தால் தான் நிரந்தரத் தீர்வு காண முடியும்.
மொத்தத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ்வாழும் ஏழை எளிய முஸ்லிம்களுக்கு தகுந்த இடம் வேண்டும், உண்ண உணவு வேண்டும், குழந்தைகள் கல்வி கற்க நிதி உதவி வேண்டும், மத்திய மற்றும் பிற மாநில அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வேண்டும். பொருளாதார மறுமலர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு வேண்டும். தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு வேண்டும். ஷாருக்கானும் வேண்டாம்! சானியா மிர்சாவும் வேண்டாம்.!!
- Published in Vanjoor
|